de villiers retired from international cricket
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.
தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தனி முத்திரை பதித்தார்.
இவரது அதிரடி ஆட்டத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னாப்பிரிக்காவைக் கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டிவில்லியர்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவதால், 360 டிகிரி என வர்ணிக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார்.
டிவில்லியர்ஸின் கேப்டன்சியில், 2015 உலக கோப்பையை தென்னாப்பிரிக்கா தான் வெல்லும் என சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறியது. அப்போது கேப்டன் டிவில்லியர்ஸ் மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார்.
சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரரான டிவில்லியர்ஸ், அர்ப்பணிப்புடன் ஆடக்கூடியவர். உலகம் முழுதும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். டிவில்லியர்ஸுக்கு வயது 34. ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார்.
114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8765 ரன்கள் எடுத்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள டிவில்லியர்ஸ் 9577 ரன்களை குவித்துள்ளார். 78 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1672 ரன்கள் எடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், டிவில்லியர்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிவில்லியர்ஸின் முடிவு தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாகவும் பாதிப்பாகவும் அமையும். அவரை போன்ற ஒரு வீரரை யாரை வைத்து சரிகட்டும் தென்னாப்பிரிக்கா?
