மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக்கொடுக்க ஆஸ்திரேலிய அணி தயாராக இல்லை. கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருகிறார் கம்மின்ஸ். 

மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 443 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 292 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 106 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

399 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் முறையே 3 மற்றும் 14 ரன்களில் ஜடேஜா மற்றும் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். 33 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் நீண்ட பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை. 33 ரன்களில் கவாஜாவை ஷமி வீழ்த்தினார். களத்தில் நிலைத்து நின்று அரைசதத்தை நெருங்கிய ஷான் மார்ஷை 44 ரன்களில் பும்ரா வீழ்த்தினார். 

இவரைத்தொடர்ந்து மிட்செல் மார்ஷையும் டிம் பெய்னையும் ஜடேஜா வீழ்த்தினார். மிட்செல்ஸ் ஸ்டார்க்கை ஷமி வீழ்த்தினார். 215 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பாட் கம்மின்ஸ் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் ரன்களையும் சேர்த்தார். 

கம்மின்ஸுடன் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லயன் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பொறுப்புடன் தெளிவாக ஆடிய கம்மின்ஸ் அரைசதம் அடித்தார். பவுலிங்கில் அசத்தி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ், பேட்டிங்கிலும் அருமையாக செயல்பட்டு அரைசதம் அடித்தார். 

நான்காம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் இன்றே போட்டியை முடிக்கும் விதமாக கூடுதலாக 5 ஓவர்கள் வீச அனுமதிக்கப்பட்டனர். எனினும் இந்திய பவுலர்களால் கம்மின்ஸ் - லயன் ஜோடியை பிரிக்க முடியவில்லை. கம்மின்ஸ் கடுமையாக போராடிவருகிறார். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது.