சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான ஜடேஜாவின் 30வது பிறந்தநாள் நேற்று. ஜடேஜாவின் பிறந்தநாளை ஒட்டி, 2013ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற வைத்த ஜடேஜாவின் இன்னிங்ஸை சிஎஸ்கே அணி டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

தோனி தலைமையிலான இந்திய அணியில், அவரது தளபதிகளாக திகழ்ந்தவர்களில் ஒருவர் ஜடேஜா. ஐபிஎல்லில் 2012ம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியின் தலைமையில் ஆடிவருகிறார். இடையில் சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடை பெற்றிருந்தது. அந்த இரண்டு சீசனில் சென்னை அணிக்காக ஆடவில்லை.

2019 ஐபிஎல் சீசனுக்கும் சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு இந்திய அணியில் ஆடாத ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை ஆகியவற்றில் ஆடி மீண்டும் முத்திரை பதித்தார். 

இந்நிலையில், நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார் ஜடேஜா. ஜடேஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது. மேலும் 2013 ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்பி சிங் வீசிய அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி, வெற்றியை எளிமைப்படுத்திய ஜடேஜா, கடைசி பந்தில் திரில் வெற்றி பெற வைத்தார். ஜடேஜாவின் பிறந்தநாளை ஒட்டி அந்த வீடியோவையும் சிஎஸ்கே அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.