ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதமே தொடங்க உள்ளது. அதற்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. 

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி ஏலம் நடந்துவருகிறது. வெறும் 8.4 கோடி ரூபாய் மட்டுமே இருப்பு வைத்திருந்த நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே 23 வீரர்கள் இருப்பதால், வெறும் இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில், ஏலத்திற்கு வந்தது சென்னை அணி. ஏற்கனவே சென்னை அணி செட்டாகி விட்டதால், பெரியளவில் இந்த ஏலத்தை சென்னை அணி எதிர்பார்த்திருக்கவில்லை. 

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மாவை ரூ.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது சென்னை அணி. ஏற்கனவே சென்னை அணியில் ஆடிய மோஹித் சர்மா, கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடினார். சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டெத் ஓவர்களில் தோனிக்கு கடும் நெருக்கடி கொடுத்துவிட்டார் மோஹித் சர்மா. அந்த போட்டியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசினார். தோனியும் அந்த பந்துகளை அடிக்க முடியாமல் திணறினார். 

அதற்கு காரணம், முந்தைய சீசன்களில் சென்னை அணியில் ஆடிய மோஹித் சர்மா, வலைப்பயிற்சியின் போது தோனிக்கு அதிகமாக பந்துவீசியிருந்ததால், தோனியின் மைனஸ் பாயிண்டை நன்கு அறிந்திருந்தார். அது, அவருக்கு கடந்த சீசனில் உதவிகரமாக இருந்ததால் தோனிக்கு நெருக்கடி கொடுத்தார். இந்நிலையில், அவரை 5 கோடி ரூபாய்க்கு இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது. 

சென்னை அணி எடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தோனிக்கு நெருக்கடி கொடுத்ததால் அவரை நம் அணியிலேயே பெற்றிருந்தால் பிரச்னையில்லை என்பது. மற்றொரு காரணம், சென்னை அணி சூதாட்டப் புகாரால் தடை பெறுவதற்கு முந்தைய சீசன்களில் சென்னை அணியில் ஆடி சிறப்பாக பந்துவீசியுள்ளார். இந்த இரண்டு காரணங்களில் ஒன்றிற்காக அவரை நல்ல தொகையான 5 கோடிக்கு சென்னை அணி எடுத்துள்ளது.