Asianet News TamilAsianet News Tamil

வெறும் 4 ஓட்டங்களில் பஞ்சாபிடம் வெற்றியை கோட்டை விட்டது சென்னை அணி...

Chennai Super Kings defeated by Punjab by 4 wickets
Chennai Super Kings defeated by Punjab by 4 wickets
Author
First Published Apr 16, 2018, 10:49 AM IST


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் 12-வது ஆட்டம் நேற்று மொஹாலியில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி ஆட்டம் மேற்கொண்டனர்.

இருவரும் இணைந்து 8-வது ஓவருக்கு 96 ஓட்டங்களை குவித்திருந்தபோது லோகேஷ் 37 ஓட்டங்களில் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அவரைத் தொடர்ந்து 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் கிறிஸ் கெயில் 63 ஓட்டங்களிலும், மயங்க் அகர்வால் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் யுவராஜ் சிங்-ஆரோன் பின்ச் இணை ஆட்டத்தைத் தொடர்ந்த போது தாஹிர் பந்து வீச்சில் எல்பிடபிள்யு முறையில் பின்ச் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் தாகுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பின்னர் ஆடிய கருண்நாயர் 29 ஓட்டங்கள், கேப்டன் அஸ்வின் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர், ஆன்ட்ரு டை 3 ஓட்டங்கள், பைரேந்தர் ரேன் ஓட்டங்கள் ஏதுமின்றி களத்தில் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

சென்னை அணி தரப்பில் தாகுர், தாஹீர் 2 விக்கெட்டுகளையும், பிராவோ, வாட்சன், ஹர்பஜன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய சென்னை அணி சார்பில் ஷேன்வாட்சன், முரளி விஜய் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ஆனால் வாட்சன் 11 ஓட்டங்களிலும், முரளி விஜய் 12 ஓட்டங்களிலும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சாம் பில்லிங்ஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அம்பதி ராயுடு - கேப்டன் தோனி இணை நிலைத்து நின்று ஆடி ஓட்டங்களை சேகரித்தது. 49 ஓட்டங்களை குவித்த ராயுடுவை அஸ்வின் ரன் அவுட் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது 13.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை 113 ஓட்டங்களையே எடுத்திருந்தது. 

தோனி - ரவீந்திர ஜடேஜா இணை பொறுமையாக ஆடி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டது. 19 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 44 பந்துகளில் தோனி 79 ஓட்டங்களைக் குவித்தும், பிராவோ 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 193 ஓட்டங்களை மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் பஞ்சாப்பின் மொகித் சர்மா திறமையாக பந்து வீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார். எனினும் கடைசி பந்தில் தோனி இமாலய சிக்ஸரை அடித்தார்.

ஆன்ட்ரு டை 2 விக்கெட்டையும், மொகித், அஸ்வின் தலா விக்கெட்டையும் வீழ்த்தினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் அணி வீழ்த்தியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios