பஞ்சாப் காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளராக இந்திய மகளிர் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பொறுப்பேற்றார்.

ஹர்மன்பிரீத் கௌர் (28) இந்திய ரயில்வேயில் அலுவலக கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். இரயில்வே நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இவர் 5 ஆண்டுகள் வரை அந்தப் பொறுப்பில் நீடிக்க வேண்டும்.

அந்த காலகட்டம் நிறைவடைவதற்குள், பணியில் இருந்து விலக நேரிடும் பட்சத்தில் 5 ஆண்டு ஊதியத்தையும் ரயில்வே நிர்வாகத்துக்கு அவர் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார். பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்மன்பிரீத், தனது சிறப்பான ஆட்டத்தால் அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கின் கவனத்தை ஈர்த்தார்.

மாநிலத்துக்கு பெருமை சேர்த்து வருபவர் என்ற வகையில், அவருக்கு காவல்துறையில் உயர் பதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் உறுதி அளித்திருந்தார். அத்துடன், ரயில்வே நிர்வாகத்திடம் இதுதொடர்பாக அவர் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, ரயில்வேயில் தாம் வகித்துவந்த பொறுப்பிலிருந்து ஹர்மன்பிரீத் விலகினார்.

இந்த நிலையில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது சீருடையில் தோல்பட்டை பகுதியில் அவரது பதவியை அடையாளப்படுத்த உதவும் நட்சத்திரங்களை அமரீந்தர் சிங்கும், காவல் துறை டிஜிபி சுரேஷ் அரோராவும் பொருத்தி சிறப்பித்தனர்.