இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பட்லர்-ஸ்டோக்ஸ் ஜோடி, இந்திய அணிக்கு பயம் காட்டிவிட்டது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவை என்பதால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. எனினும் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பட்லர்-ஸ்டோக்ஸ் பார்ட்னர்ஷிப் இந்திய அணியை மிரட்டிவிட்டது. 

521 ரன்கள் என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, அந்த இலக்கு ஒரு டென்ஷன் என்றால், இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருந்தது மற்றொரு டென்ஷன். ஏனென்றால், ஒரு நாள் மீதமிருந்தாலாவது, ஒருநாள் முழுக்க எப்படியாவது 10 விக்கெட்டுகளையும் இழந்துவிடாமல் களத்தில் நின்றால் டிராவாவது செய்துவிடலாம். ஆனால் இரண்டு நாட்கள் மீதமிருந்ததால், 180 ஓவர்கள் ஆடுவது என்பது கடினமான ஒன்று .

அப்படி நெருக்கடியான சூழலில் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளை 62 ரன்களுக்கு உள்ளாக இந்திய அணி வீழ்த்திவிட்டது. முழுவதுமாக இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், மிகவும் நெருக்கடியான கட்டத்தில் பட்லரும் ஸ்டோக்ஸும் அருமையாக ஆடினர். இருவரும் நிதானமாக தொடங்கி, பின்னர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 

பட்லர் களமிறங்கியதும் ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை ரிஷப் பண்ட் தவறவிட்டார். அதை பயன்படுத்தி அபாரமாக ஆடினார் பட்லர். பட்லருக்கு ஸ்டோக்ஸ் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் சுமார் 58 ஓவர்கள் களத்தில் நின்று ஆடினர். அவர்கள் இருவரும் களத்தில் நின்றபோது இந்திய அணி கலக்கமடைந்தது. இந்திய வீரர்களை அவர்கள் சோதித்துவிட்டனர். இலக்கு மிகவும் அதிகம் என்பதால் இந்திய அணி  நம்பிக்கையுடன் ஆடியது. ஆனால் உண்மையாகவே பட்லரும் ஸ்டோக்ஸும் களத்தில் நின்றபோது, இந்த மேட்ச்சும் போச்சா? என்றுதான் ரசிகர்களின் எண்ணம் இருந்திருக்கும். 

பட்லரும் ஸ்டோக்ஸும் களத்தில் நின்ற நேரத்தில், சுப்ரமணியபுரம் படத்தில் வரும், பரமா.. மரண பயத்தை காட்டிட்டான் பரமா!! என்ற வசனம் இந்திய அணியின் மனநிலைக்கு சரியாக இருக்கும். அப்படித்தான் இருந்தது அவர்களின் ஆட்டம். சிறிது நேரம் களத்தில் ஆடியபிறகு, எந்தவித பதற்றமும் இல்லாமல் ஆடினர். ஆனால் சதமடித்த பட்லரை ஒருவழியாக 106 ரன்களில் வீழ்த்தி பும்ரா பிரேக் கொடுத்தார். அதன்பிறகு பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், வோக்ஸ் என மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவை என்பதால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்றாலும், பட்லர்-ஸ்டோக்ஸ் ஜோடியின் ஆட்டம் சிறப்பானது.