இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு நட்சத்திரமாக திகழ்கிறார் பும்ரா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, 48 விக்கெட்டுகளை வீழ்த்தி, அறிமுக ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் மூன்றாமிடத்தில் உள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் பும்ரா, இந்த ஆண்டில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுகமான ஆண்டிலேயே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அதேபோல அவரது பவுலிங் வேகமும் வேரியேஷனும் அபரிமிதமாக உள்ளது. தனது அபாரமான பவுலிங்கின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுவதோடு மட்டுமல்லாது முன்னாள் வீரர்களையும் கவர்ந்துள்ளார். பும்ரா இந்திய பவுலிங்கின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். பும்ராவை இந்திய பவுலிங்கின் விராட் கோலி என்று ஆகாஷ் சோப்ரா புகழ்ந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 86 ரன்களை கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த பும்ரா, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில், பும்ராவின் பவுலிங் வேரியேஷன் வாசிம் அக்ரமை நினைவுபடுத்துவதாக முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் புகழாரம் சூட்டியுள்ளார். பும்ரா குறித்து பேசிய லட்சுமணன், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டங்களை சரியாக செயல்படுத்துபவரே சிறந்த பவுலர். அந்த வகையில் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் தான் வைத்திருக்கும் திட்டங்களை முதல் பந்திலிருந்தே சிறப்பாக செயல்படுத்துகிறார் பும்ரா. சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த பவுலராக பும்ரா திகழ்கிறார். அவரது பவுலிங் வேரியேஷன் மிரட்டலாக உள்ளது. என்னை பொறுத்தவரை நான் எதிர்கொண்டதில் மிகவும் கடினமான பவுலர் என்றால் வாசிம் அக்ரம் தான். ஏனென்றால் அவர்தான் அதிகமான வேரியேஷனில் பந்துகளை வீசுவார். பும்ராவின் பவுலிங் வேரியேஷன் எனக்கு வாசிம் அக்ரமை நினைவுபடுத்துகிறது என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.