Brisbane International Tennis Nick Kirrios who won the first time in his own soil ...

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் தனது சொந்த மண்ணில் முதல் முறையாக சாம்பியன் வென்று ஏடிபி பட்டம் பெற்றார்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த நிக் கிர்ஜியோஸ், உலகின் 47-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ரையான் ஹாரிசனை எதிர்கொண்டார்.

ஹாரிசனுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 3 சர்வ்களில் தடுமாறிய கிர்ஜியோஸ், 5 பிரேக் பாய்ண்டுகளை தற்காத்து, ஒரேயொரு பிரேக் பாய்ண்ட்டை மட்டும் இழந்தார்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 17 ஏஸ்களை பறக்கவிட்டார் கிர்ஜியோஸ். முதல் செட்டின் 7-வது கேமில் ஹாரிசனின் சர்வை பிரேக் செய்த கிர்ஜியோஸ், ஹாரிசனின் மேலும் 2 சர்வ்களை கிர்ஜியோஸ் பிரேக் செய்து, ஆட்டத்தை தன்வசமாக்கினார்.

இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிர்ஜியோஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இது ஒட்டுமொத்தமாக அவர் பெறும் 4-வது பட்டம்.

வெற்றிக்குப் பிறகு பேசிய நிக் கிர்ஜியோஸ், "உண்மையில் இந்தப் போட்டியில் எவ்வாறு விளையாடப் போகிறேன் என்று நானே அறிந்திருக்கவில்லை. ஆனால், போட்டி தொடங்கி களம் கண்ட பிறகு எனது ஆட்டம் மேம்பட்டு வருவதை உணரத் தொடங்கினேன். இறுதிச்சுற்றும் எனக்கான சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்தது.

ஒருவேளை இந்தப் போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்றிருந்தாலும், கவலை அடையாமல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருப்பேன்' என்றார்.