பிசிசிஐ ஜூனியர் அணி தேர்வுக் குழுவில் முன்னாள் இந்திய வீரரான ஆசீஷ் கபூருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் அணியை தேர்வு செய்வதற்காக மூன்று நபர்கள் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. 

இந்தக் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் இடம் பெற்றிருந்தார். இதற்கிடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்தியா வாகை சூடியது. 

அதனையடுத்து அடுத்து அவர் தனது பதவியை விட்டு விலகி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

அவரது ராஜிநாமாவால் ஏற்பட்ட காலியிடத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஆசீஷ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். கபூர் 4 டெஸ்ட்டுகள், 17 ஒருநாள் போட்டிகளில் நாட்டுக்காக விளையாடினார். 

இந்தக் குழுவின் இதர உறுப்பினர்கள் ஞானேந்திரா பாண்டே, ராகேஷ் பாரீக் ஆகியோர் ஆவர்.