ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா பிரம்மாண்ட வெற்றியை ருசித்துள்ளது.

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ்வென்ற பெங்களூரு அணி கேப்டன் வீராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் கொல்கத்தா அணி வீரர்கள் ரன் எடுக்க சிரமப்பட்டனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நைரன் மட்டுமே தாக்குப்பிடித்து 17 பந்துகளுக்கு 34 ரன்களை குவித்தார். கவுதம் கம்பீர் 14 ரன்களிலும், ராபின் உத்தப்பா 11 ரன்களிலும் மனீஷ் பாண்டே 15 ரன்களிலும், சூர்யகுமார்  யாதவ் 15 ரன்களிலும், கிறிஸ் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஏனையவர்கள் ஒற்றயை இலக்க ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் கொல்கத்தா அணி 19.3 ஓவர்களின் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.சிக்ஸர் மன்னன் கிறிஸ்கெயில் 7 ரன்களிலும், கேப்டன் வீராட்கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

சீட்டுக் கட்டு சரிவதைப் போல பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், 9.4 ஓவர்களின் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூரு படுதோல்வியைச் சந்தித்தது.

இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றியைப் பெற்றது.