Asianet News TamilAsianet News Tamil

பந்தை சேதப்படுத்த சொன்னது யார்..? பான்கிராஃப்ட் பகிரங்கம்

பந்தை சேதப்படுத்துவதற்கு தன்னை ஊக்கப்படுத்தியது யார் என்று பான்கிராஃப்ட் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 
 

bancroft reveals who encouraged him to tamper the ball
Author
Australia, First Published Dec 26, 2018, 11:15 AM IST

பந்தை சேதப்படுத்துவதற்கு தன்னை ஊக்கப்படுத்தியது யார் என்று பான்கிராஃப்ட் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியில் நன்கு வளர்ந்து வந்த வீரரான பான்கிராஃப்ட், தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே மிகக்கடினமான சூழலை கடந்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக 9 மாதங்கள் தடை பெற்றார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பான்கிராஃப்ட் பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரும் சிக்கினர். பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. 

bancroft reveals who encouraged him to tamper the ball

இந்த விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கும் அணிக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கியது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி தங்கள் கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையையும் ரசிகர்களின் ஆதரவையும் மீட்டெடுக்க போராடிவருகிறது. 

பந்தை சேதப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியதை நினைத்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் மனம் வருந்தி கண்ணீர் விட்டனர். 9 மாதங்கள் தடை பெற்ற பான்கிராஃப்ட்டின் தடை வரும் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, நடந்துவரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக பான்கிராஃப்ட் ஆட உள்ளார். 

bancroft reveals who encouraged him to tamper the ball

இந்நிலையில், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த பான்கிராஃப்ட், தன்னை பந்தை சேதப்படுத்துவதற்கு உத்வேகப்படுத்தியது யார் என்றும் அந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்தார். இதுகுறித்து பேசிய பான்கிராஃப்ட், பந்தை சேதப்படுத்துவதற்கு வார்னர் என்னை ஊக்கப்படுத்தினார். அந்த நேரத்தில் எங்கள் அணி இருந்த நிலையில், என்னால் அது சரியா தவறா என்றெல்லாம் சிந்திக்க தோன்றவில்லை. என்னை சுற்றியிருந்த சூழலை பொறுத்து அமைந்தது அந்த சம்பவம். ஆனால் எங்கள் அணிக்கும் அணி சார்ந்த ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேன் என்று அன்றைய தினம் படுக்கும்போது மிகவும் வருந்தினேன். ஆனால் இந்த சம்பவத்திற்கு யார் மீதும் பழியை போடவிரும்பவில்லை என்றார் பான்கிராஃப்ட். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios