டி20 லீக் தொடர்களை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் 10 ஓவர்களை கொண்ட டி10 லீக் தொடர் ஆடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு டி10 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 8 அணிகள் கலந்துகொண்டு ஆடும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் பல மிரட்சியான இன்னிங்ஸ்கள் ஆடப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ ஆடியுள்ளார். 

இந்த தொடரில் ராஜ்பூட்ஸ் அணியில் ஆடிவரும் ஆஃப்கான் வீரர் ஷேஷாத் 16 பந்துகளில் 74 ரன்கள் அடித்து மிரட்டினார். இவரை தொடர்ந்து நார்தர்ன் வாரியர்ஸ் அணியில் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் ஒரு போட்டியில் 25 பந்துகளில் 77 ரன்களை விளாசி மிரட்டினார். 

தற்போது இவற்றையெல்லாம் மிஞ்சும் ஒரு இன்னிங்ஸை ஆடியுள்ளார் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ. பெங்கால் டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 84 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். கேரளா நைட்ஸ் மற்றும் பெங்கால் டைகர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் டைகர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 123 ரன்களை குவித்தது. 

124 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கிறிஸ் கெய்ல் மற்றும் ஸ்டிர்லிங் ஆகிய இருவருமே ஏமாற்றினர். கெய்ல் 10 பந்துகளில் 19 ரன்களும் ஸ்டிர்லிங் 6 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மொத்தமாக 16 பந்துகளில் இருவரும் இணைந்து வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 

இதைத்தொடர்ந்து களத்திற்கு வந்த ஜானி பேர்ஸ்டோ பெங்கால் டைகர்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். வெறும் 24 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்களை குவித்தார். இவரது அதிரடியால் 9வது ஓவரிலேயே இலக்கை எட்டி கேரளா நைட்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.