ஆமதாபாத்,

உலக கோப்பை கபடியில் இந்திய அணி தாய்லாந்தை 73-20 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பாகுபலியாய் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று நடைபெறும் சாம்பியன் மகுடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானுடன் மோதுகிறது.

மூன்றாவது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த கபடி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், தாய்லாந்தும் மோதின.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், தாய்லாந்தை திணறடித்தனர். ரைடு சென்று புள்ளி எடுப்பதிலும், எதிரணி வீரர்களை மடக்கி பிடிப்பதிலும் கச்சிதமாக செயல்பட்ட இந்திய வீரர்கள் புள்ளிகளை வாரி குவித்தனர். முதல் பாதியில் இந்தியா 36-8 என்று முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் ‘பிடி’ வலுவாக இருந்ததால் ஆட்டம் ஒரு தரப்பாக நகர்ந்தது. உள்ளூர் இரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்த இந்திய அணி 73-20 என்ற புள்ளி கணக்கில் பிரம்மாணட வெற்றியை அடைந்து, தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரைடு மூலம் மட்டும் இந்திய வீரர்கள் 42 புள்ளிகளை திரட்டினர்.

முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதியில் ஈரானும், தென்கொரியாவும் சந்தித்தன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான தென்கொரியா பலமாக போராடிய போதிலும், அனுபவம் வாய்ந்த ஈரானிடம் மீள முடியவில்லை. இதில் ஈரான் 28-22 என்ற புள்ளி கணக்கில் கொரியாவை வீழ்த்தி இறுதிசுற்றை எட்டியது.

இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஈரானும் கோதாவில் குதிக்கின்றன. 2004, 2007-ம் ஆண்டு இறுதிப்போட்டிகளிலும் இவ்விரு அணிகளே சந்தித்ததும், அதில் இந்தியா வாகை சூடியதும் நினைவு கூரத்தக்கது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.