ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு அவர் கூறியதாவது:

“ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தைப் பொருத்த வரையில், கிரிக்கெட்டில் உரிய கவனம் செலுத்தாததே அதன் பிரச்சனை.

ரஞ்சி கிரிக்கெட்டில் பின்தங்கிய நிலையில் உள்ளோம். ஹைதராபாதில் கிரிக்கெட் விளையாட்டை நன்றாக மேம்படுத்துவதே எனது நோக்கமாகும்.

தனிநபர்களின் விருப்பத்திற்கேற்ப ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தை நிர்வகிக்க முடியாது. மாவட்ட அளவில் இருந்தே கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும். கடினமாக உழைக்கும் வீரர்கள் மாவட்ட அளவில் இருந்தே உருவாகிறார்கள்” என்று அசாருதீன் கூறினார்.

கடந்த 2000-ஆம் ஆண்டில் சூதாட்ட விவகாரம் ஒன்றில் அசாருதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய பிசிசிஐ, அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடிய அசாருதீனுக்கு, சாதகமாக தீர்ப்பளித்தது ஆந்திர உயர் நீதிமன்றம்.

எனினும், அவர் மீதான தடையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.