பொதுவாகவே களத்தில் இருக்கும் வீரர்களை மனரீதியாக வலுவிழக்க செய்து அவர்களை வசைபாடி அவுட்டாக்குவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கைவந்த கலை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பணியை அந்த அணியினர் சிறப்பாக செய்துவந்துள்ளனர். ஸ்டீவ் வாக் கேப்டனாக இருந்த காலத்தில், புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற கங்குலியை, சச்சின் போன்ற ஜாம்பவான் இருக்கும் அணிக்கு நீ(கங்குலி) கேப்டனா? என கங்குலியின் காதில் விழும்படி ஸ்டீவ் வாக் வசைபாடியுள்ளார். ஆனால், ஸ்டீவ் வாக்கின் விமர்சனத்துக்கு பேட்டால் பதிலடி கொடுத்தார் கங்குலி. இந்த தகவலை கங்குலியே தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அதற்கு அடுத்து பாண்டிங் தலைமையிலான அணியில், ஹெய்டன், சைமண்ட்ஸ் உள்ளிட்ட வீரர்கள், எதிரணி வீரர்களை விமர்சனம் செய்தும் வம்புக்கு இழுத்தும் மனரீதியாக அவர்களை வீழ்த்தி அதன்மூலம் விக்கெட்டுகளை வீழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

களத்தில் நாகரிகமாக விளையாடுவதை விடுத்து ஆக்ரோஷமாக அத்துமீறி எதிரணியினரை வீழ்த்த முயல்வது அவர்களது வழக்கம். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், எதிரணியினருடன் சண்டை போடாத போட்டி உள்ளதா? என்று தேடினால் கூட கிடைக்காது.

அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் சண்டைக்கோழியாக வார்னர் திகழ்கிறார். எதிரணி வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்கிற அளவுக்கு வார்னர் அத்துமீறி செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் கேப்டன் இயன் சேப்பலே வார்னரை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த அணியின் கேப்டன் ஸ்மித்தையும் சேப்பல் விமர்சித்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின்போது டிவில்லியர்ஸை அவுட்டாக்கிய பிறகான லயன் மற்றும் வார்னரின் செயல்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின. 

அதேபோல் டிரெஸ்ஸிங் ரூம் அருகே வார்னர் மற்றும் டிகாக் இடையேயான சண்டை சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சண்டையின் எதிரொலியாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு ஒரு டீமெரிட் புள்ளியும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த சண்டை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கும் வார்னரின் செயல்பாடுகளுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

வார்னர் மற்றும் டிகாக் சண்டை தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் டிம் பெய்ன், டி காக் பேட் செய்யும் போது அவர் அங்கு நின்று ஆட முடியாதவண்ணம் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியது உண்மைதான், ஆனால் எல்லை மீறவில்லை. கிரிக்கெட் பற்றி பேசினோம், டி காக் உடற்தகுதி பற்றி ஓரிரு வார்த்தைகளைக் கூறினோம். களத்தில் நிற்பதை அவர்கள் கடினமாக உணர வேண்டும் என்பதற்காகச் செய்வதுதானே தவிர தனிப்பட்ட, அந்தரங்கத் தாக்குதல் எதுவும் இல்லை. இப்படி நாங்கள் விளையாடும் காலம் வரை செய்து கொண்டுதான் இருப்போம் என பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரின் பேச்சு கரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.