இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் வேற லெவல் பேட்ஸ்மேன்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் புகழாரம் சூட்டியுள்ளார். 

சமகால சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக வலம்வருவது ரோஹித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி. தொடக்க ஜோடியாக பல சாதனைகளை நிகழ்த்திவருகின்றனர். இருவருமே மிகச்சிறந்த வீரர்கள். தவான் தொடக்கம் முதலே அடித்து ஆடக்கூடியவர், ரோஹித் சர்மா களத்தில் நிலைத்து நின்று பின்னர் எதிரணியை துவம்சம் செய்து பெரிய இன்னிங்ஸை ஆடக்கூடியவர். இருவரும் சிறப்பாக ஆடுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 

இந்திய அணிக்கு நீண்டகாலமாக நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துவருகின்றனர். ஓபனிங்கில் இருவரும் சிறப்பாக ஆடிவிட்டால் இந்திய அணியின் வெற்றி 99 சதவிகிதம் உறுதி. இவர்களின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று சிட்னியில் நடந்த கடைசி டி20 போட்டியிலும் கூட அப்படித்தான். ரோஹித் - தவானின் ஓபனிங் அதிரடிதான் வெற்றியை ஆஸ்திரேலியாவிடமிருந்து எளிதில் பறிக்க உதவிகரமாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 6 ஓவரில் 67 ரன்களை குவித்துவிட்டனர். அதன்பிறகு பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு வேலை எளிதானது. இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்தது. 

போட்டிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், இந்திய வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர். பவர்பிளேயில் முதல் விக்கெட்டுக்கு 67 ரன்களை இந்திய அணி சேர்த்துவிட்ட பிறகு அதிலிருந்து மீண்டுவருவது எங்களுக்கு கடினமாகிவிட்டது. நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமான ரன்கள் அடித்திருந்தால் எங்களுக்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே ஆடி டஃப் கொடுத்தோம். 

ரோஹித்தும் தவானும் வேற லெவல் பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கு வீசுவது எந்த பவுலருக்கும் கடினமான விஷயம்தான். அதனால்தான் அவர்கள் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கின்றனர் என்று ஃபின்ச் புகழாரம் சூட்டினார்.