இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ரன்களை குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி வெறும் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாரா, ரிஷப் பண்ட்டின் சதங்கள் மற்றும் மயன்க், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான அரைசதங்கள் ஆகியவற்றால் 622 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 24 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று போட்டியின் இடையே மழை பெய்ததால் 16.3 ஓவர்கள் வீசப்படவில்லை. 

அதனால் இன்றைய ஆட்டம் அரைமணி நேரம் முன்னதாக தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கியதும் இரண்டாவது ஓவரிலேயே பாட் கம்மின்ஸை வீழ்த்தினார் ஷமி. களத்தில் நிலைத்து ஆடிவந்த ஹேண்ட்ஸ்கம்ப்பை 37 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார் பும்ரா. 

நாதன் லயனை குல்தீப் யாதவ் டக் அவுட்டாக்கி அனுப்ப, குல்தீப் வீசிய அடுத்த ஓவரிலேயே ஹேசில்வுட் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை விஹாரி தவறவிட்டார். விஹாரி அதை பிடித்திருந்தால் 264 ரன்களுக்கே ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிந்திருக்கும். விஹாரி கொடுத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹேசில்வுட், அடித்து ஆட ஆரம்பித்தார். ஸ்டார்க்கும் ஹேசில்வுட்டும் ஜடேஜா மற்றும் குல்தீப்பின் பவுலிங்கை அடித்து ஆடினர். 

கடைசி விக்கெட்டுக்கு இந்த ஜோடி 42 ரன்களை சேர்த்தது. இறுதியில் ஹேசில்வுட்டை குல்தீப் வீழ்த்தினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை 300 ரன்களுக்கு இழந்தது. ஃபாலோ ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.