Asian shooter championship Indian players wins five medals on first day...
பத்தாவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் ஐந்து பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.
பத்தாவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் வாகோ சிட்டி நகரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் இந்தியா ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
அதில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெண்கலப் பதக்கமும், அதே பிரிவில் ஜூனியர்களுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கமும், அணிகளுக்கான மூன்று பிரிவுகளில் இந்தியாவின் மூன்று அணிகள் வெள்ளிப் பதக்கமும் வென்றன.
இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் ரவி குமார், தீபக் குமார், ககன் நரங் ஆகியோர் தகுதிபெற்றனர். இதில் ரவி குமார் 225.7 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
சீனாவின் சாங் புஹான் 250.2 புள்ளிகளுடன் தங்கமும், சகநாட்டவரான காவ் 248.6 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர்.
இதர இந்தியர்களான ககன் நரங் 205.6 புள்ளிகளுடன் 4-ஆவது இடமும், தீபக் குமார் 185 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும் பிடித்தனர்.
இதனிடையே ரவி, தீபக், ககன் அடங்கிய குழு, அணிகளுக்கான பிரிவில் 1876.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது.
சீன அணி 1885.9 புள்ளிகளுடன் முதலிடமும், ஜப்பான் 1866.7 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தன.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் அணி பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மோத்கில், மேக்னா சஜ்ஜனார், பூஜா காட்கர் ஆகியோர் குழு 1247 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது.
முன்னதாக நடைபெற்ற தனிநபர் பிரிவு இறுதிச்சுற்றில் அஞ்சும் 4-ஆம் இடமும், மேக்னா 6-ஆம் இடமும் பிடித்தனர்.
இதேபோல் ஜூனியர் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா 0.1 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்து வெள்ளி வென்றார்.
ஜூனியர் உலக சாம்பியனான சீனாவின் யுகுன் லியு தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்தியரான தேஜாஸ் கிருஷ்ண பிரசாத் இறுதிச்சுற்றில் 7-ஆம் இடம் பிடித்தார்.
இதனிடையே, அணிகளுக்கான பிரிவில் அர்ஜூன், தேஜாஸ், சன்மூன் சிங் பிரார் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, 1867.5 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது.
