Ashes Test Australia score is eight The last day today is 210 goals goal ...
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி நாளான இன்று 210 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கைவசம் ஆறு விக்கெட்களுடன் களமிறங்குகிறது இங்கிலாந்து.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 193 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 303 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 4-ஆம் நாளான நேற்றைய முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட கடைசி நாளான இன்று இங்கிலாந்து 210 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 6 விக்கெட்டுகளே உள்ளன. எனவே, இங்கிலாந்து ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 346 ஓட்டங்கள் எடுத்தது. ஜோ ரூட் 83 ஓட்டங்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா சனிக்கிழமை முடிவில் 157 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 479 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 4-ஆம் நாள் ஆட்டத்தை ஷான் மார்ஷ் 98, மிட்செல் மார்ஷ் 63 ஓட்டங்களுடன் தொடங்கினர்.
இதில் சிறிது நேரத்திலேயே சதம் கடந்தார் ஷான் மார்ஷ். மறுமுனையில் மிட்செல் மார்ஷும் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக 100 ஓட்டங்கள் அடித்தார். அவர் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டாகினார்.
மார்ஷ் சகோதரர்கள் கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 169 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து டிம் பெய்ன் களம் காண, ஷான் மார்ஷ் 18 பவுண்டரிகள் உள்பட 156 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஸ்டோன்மேனால் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் வந்த ஸ்டார்க் 11 ஓட்டங்களில் வீழ்ந்தார்.
ஆஸ்திரேலியா 649 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. பெய்ன் 38 ஓட்டங்கள் , கம்மின்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்தில் மொயீன் அலி 2 விக்கெட்கள், ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், டாம் கியூரன், மேசன் கிரேன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரூட் 42 ஓட்டங்கள் , பேர்ஸ்டோவ் 17 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றனர். குக் 10 ஓட்டங்கள் , வின்ஸ் 18 ஓட்டங்கள் , மலான் 5 ஓட்டங்களுக்கு வீழ்ந்தனர்.
ஆஸ்திரேலியாவில் நாதன் லயன் 2, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட கடைசி நாளான இன்று இங்கிலாந்து 210 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். அணியின் வசம் 6 விக்கெட்டுகளே உள்ளன.
