செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!
எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் கார் பிரக்ஞானந்தா குடும்பத்திடம் இன்று வழங்கப்பட்டது. காரின் சாவி பிரக்ஞானந்தாவின் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
செஸ் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அஜா்பைஜான் நாட்டில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா (18) கலந்துகொண்டார். இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலகின் முதல் நிலை வீரரான நார்வே நாட்டின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் பட்டம் வென்றாா். செஸ் உலகக் கோப்பை போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு பைனல் வரை முன்னேறிய பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இந்தப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இளம் செஸ் வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார்.
ஆழ்கடல் அதிசயம்! நட்சத்திர வடிவ வினோத விலங்கு உள்பட 100 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் பங்கேற்க ஊக்குவித்து உறுதுணையாக இருக்கும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி - ரமேஷ்பாபு தம்பதிக்கு எக்ஸ்யுவி 400 (XUV4OO) எலக்ட்ரிக் காரை பரிசாக அளிக்கிறேன்” என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் கார் பிரக்ஞானந்தா குடும்பத்திடம் இன்று வழங்கப்பட்டது. காரின் சாவி பிரக்ஞானந்தாவின் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, “காரைப் பெற்றுக்கொண்டேன். என் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவு வெளியானவுடன் ஆனந்த் மஹிந்திராவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
தேர்தல் பத்திர விவரங்களை அனுப்பியது ஸ்டேட் வங்கி! உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?