American Open Women and Men players advanced to next round

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கரோலின் பிளிஸ்கோவா, மேடிசன் கீஸ், ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செக்.குடியரசின் கரோலின் பிளிஸ்கோவா, போலந்தின் மக்டா லினெட்டேவுடன் மோதி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

அதேபோன்று அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 7-6 (6) என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் எல்லிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர். 

ஆனால், நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 3-6, 1-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் இளம் வீராங்கனையான நயோமி ஒசாக்காவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

19 வயதான ஒசாக்கா தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரு வீராங்கனைக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் அமெரிக்காவின் 19 வயது வீரரான பிரான்செஸ் டியாஃபோவுடன் மோதி 4-6, 6-2, 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 7-6 (6), 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் துஸான் லஜோவிச்சை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.