இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போகும் இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர் அலெஸ்டர் குக், தனது கடைசி இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அலெஸ்டர் குக் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ’

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணியின் குக்கும் ரூட்டும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 62 ரன்களுக்கு அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 

அதன்பிறகு குக்குடன் ரூட் ஜோடி சேர்ந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் அவர்கள் இருவரும் களத்தில் இருந்தனர். இன்றும் இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவருமே சிறப்பாக ஆடினர். கிரிக்கெட் வாழ்க்கையில் தனது கடைசி இன்னிங்ஸை ஆடிவரும் குக், 33வது சதமடித்து அசத்தினார். இதன்மூலம் தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த வீரர் என்ற பெருமையை குக் பெற்றுள்ளார். 

2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான அலெஸ்டர் குக், அறிமுக போட்டியிலேயே சதமடித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள உள்ள குக், கடைசி டெஸ்ட் போட்டியிலும் சதமடித்துள்ளார். 

தனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் 5வது வீரர் அலெஸ்டர் குக். குக்கிற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் ரெஜ்ஜி டஃப், பில் பான்ஸ்ஃபோர்டு, கிரேக் சேப்பல் ஆகியோரும் இந்திய வீரர் முகமது அசாருதீனும் தங்களது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளனர். 

நான்காம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை குவித்துள்ளது. ஏற்கனவே 40 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், உணவு இடைவேளை வரை 283 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.