தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகிய இருவரின் டெஸ்ட் போட்டிக்கான இடங்களை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகார்கர்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருக்கிறது.

இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தொடரை இழப்பதற்கு முக்கியமான காரணம். விராட் கோலி மற்றும் புஜாராவை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சதமடிக்கவில்லை. தொடக்க வீரர்கள் தவானும் ராகுலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்திய அணியின் தொடக்கம் ஒரு போட்டியில் கூட சரியில்லை. 

முதல் போட்டியில் சரியாக ஆடாத தவான், இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு மூன்றாவது போட்டியில் தவான் சேர்க்கப்பட்டு முரளி விஜய் தொடரிலிருந்தே அனுப்பப்பட்டார். முரளி விஜய் இந்தியாவிற்கு வெளியே அண்மைக்காலமாக சொதப்பிவருகிறார். இடது-வலது காம்பினேஷனான தவான் - ராகுல் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இருவருமே தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். 

பேட்டிங்கை பொறுத்தமட்டில் தொடக்கம் மிக முக்கியம். சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவிட்டால், பிறகு வரும் வீரர்களுக்கு அது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு பிரித்வி ஷாவை சேர்க்கலாம் என்ற குரல்கள் எழுந்தன.

ஆனால் ராகுல் தான் இந்த போட்டியிலும் களமிறக்கப்பட்டார். இந்த போட்டியிலும் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்தது. இந்த தொடர் சொதப்பல், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்த விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. 

ஷிகர் தவானும் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு வெளியே டெஸ்ட் தொடர்களில் சொதப்பிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில், இதுவரை 7 இன்னிங்ஸ்களில் ஆடி 161 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 23. ராகுல், 9 இன்னிங்ஸ்களில் ஆடி 150 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி வெறும் 16.68 ஆகும். 

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் அஜித் அகார்கர், இங்கிலாந்து சூழல் தொடக்க வீரர்களுக்கு சவாலானது தான். ஆனால் ஐந்து போட்டிகள் ஆகிவிட்டது. மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். முரளி விஜயை மட்டும் இரண்டாவது போட்டிக்கு பிறகு அணியிலிருந்து நீக்கிவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க வீரராக இருந்தவர் அவர். அவரே சரியாக ஆடாததால் அனுப்பப்பட்டார். அதனால் தவான் மற்றும் ராகுல் ஆகியோருக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுவதை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.