afghanistan defeats bangladesh in first twenty over match
ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாராட்டுகளை வாங்கி குவித்த ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான், வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் மீண்டும் பவுலிங்கில் மிரட்டிவிட்டார்.
ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்பட்டு, பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை குவித்தார். டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்பின் பவுலர் என சச்சின் பாராட்டினார். ராகுல் டிராவிட், ஷேன் வார்னே ஆகியோரும் பாராட்டினர்.
ஐபிஎல் முடிந்த நிலையில், வங்கதேசத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிவருகிறது. இரு அணிகளும் 3 டி20 போட்டிகளில் ஆடுகின்றன. முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19 ஓவரில் 122 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. சுழல் மன்னன் ரஷீத் கான், 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதையும் ரஷீத் கான் வென்றார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் அணிகளுக்கு ரஷீத் கான் சவாலாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையில் ஆட ஆஃப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. உலக கோப்பையில், ரஷீத் கானின் சுழலில் சர்வதேச அணிகள் சிக்குமா, சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதற்கிடையே டெஸ்ட் போட்டி ஆட தகுதி பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் ஆடுகிறது. வரும் 14ம் தேதி பெங்களூருவில் இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட்டில் வலுவான அனுபவம் வாய்ந்த இந்திய அணியுடன் ஆஃப்கானிஸ்தான் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி, தோல்வி என்பதை கடந்து நன்றாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் களமிறங்குகிறது. எனினும் ரஷீத் கானின் சுழலில் இந்திய வீரர்கள் சிக்கிவிடாமல் இருப்பதும் முக்கியம்.
