ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் வென்று வெற்றியுடன் டெஸ்ட் தொடரை தொடங்கியது இந்திய அணி. 

அடிலெய்டு டெஸ்ட் வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. ஏனெனில் இதுவரை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, இதற்கு முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் வென்று வெற்றியுடன் தொடரை தொடங்கியதாக சரித்திரம் கிடையாது. அப்படியிருக்கையில், முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது இதுதான் முதல் முறை என்பதால் இது வரலாற்று வெற்றியாக அமைந்துள்ளது. 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். பவுலிங்கை பொறுத்தமட்டில் பும்ரா, இஷாந்த், ஷமி, அஷ்வின் ஆகிய நால்வருமே சிறப்பான பங்களிப்பை அளித்தனர். 

அடிலெய்டு டெஸ்டை இந்திய அணி வென்றதும் பல முன்னாள் ஜாம்பவான்கள் இந்திய அணியை பாராட்டினர். இந்திய அணியை பாராட்டி சச்சின் போட்டிருந்த டுவீட்டில்,  இந்திய அணி டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி அசத்தியுள்ளது. முதல் இன்னிங்ஸில் புஜாராவின் பேட்டிங்கும் இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானேவின் பேட்டிங்கும் மிக முக்கியமானது. நமது நான்கு பவுலர்களும் அருமையான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த வெற்றி எனக்கு 2003ம் ஆண்டின் வெற்றியை நினைவுபடுத்துகிறது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

2003ம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியை ராகுல் டிராவிட்டின் அருமையான பேட்டிங்கால் இந்திய அணி வென்றது. அந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 4 போட்டிகள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.