ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட்டை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. 

2014-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போட்டி ஒன்றில் அப்போட் வீசிய பந்து பின் கழுத்தில் பட்டு பிலிப் ஹக்ஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து கடுமையான மன உளைச்சலுக்கும் சோகத்திற்கும் உள்ளானவர் பவுலர் அப்போட் தான்.

அதன்பிறகு பவுலிங்கின் வேகத்தை குறைத்து வீசிவந்தார். இப்போது மீண்டும் பழைய ஃபாமுக்கு வந்துவிட்டார். அவர் மீண்டும் வேகமாக வீச தொடங்கியதும் பழைய சம்பவத்தைப் போல இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் ’ஷெபீல்டு ஷீல்டு’கோப்பைக்கான முதல் தரப் போட்டி நடந்துவருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் அணியும் விக்டோரியா அணியும் மோதின. சவுத் வேல்ஸ் அணி சார்பில், வேகப்பந்து வீச்சாளர் அப்போட் பந்துவீசினார். அவர் வீசிய பவுன்சர், 20 வயதான இளம் பேட்ஸ்மேன் 20 புகோவ்ஸ்கியின் ஹெல்மெட்டில் வேகமாகத் தாக்கியது. 

இதில் நிலைகுலைந்த புகோவ்ஸ்கி, சரிந்து விழுந்தார். உடனடியாக மற்ற வீரர்கள் மற்றும் நடுவர்கள் வந்து அவரை தூக்க முயன்றனர். உடனடியாக பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பேட்ஸ்மேன் சாதாரண நிலைக்கு திரும்ப அதிக நேரம் ஆனது. ஆனாலும் அவரால் நடக்க முடியவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் மீண்டும் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.