ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதை தொடர்ந்து, “20 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு இப்போதுதான் பலன் கிடைத்தது” என்று தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 31 வயதான சர்தார் சிங் இந்தியாவின் தலைசிறந்த மிட்பீல்டர்களில் ஒருவர்.

இவர், 2008 அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தலைமை வகித்தபோது, இளம் வயதில் கேப்டன் பதவியை பிடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.

2010, 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் சர்தார் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.

2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சர்வதேச வலைகோல் பந்தாட்ட சம்மேளனத்தின் கனவு அணியில் இடம் பிடித்தார்.

2015-இல் பத்மஸ்ரீ விருதை வென்ற சர்தார் சிங், இப்போது கேல் ரத்னா விருதைப் பெறவிருக்கிறார்.

இது குறித்து சர்தார் சிங் கூறியது:

“கடந்த 20 ஆண்டுகளாக கடினமாக உழைத்து வருகிறேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. கேல் ரத்னா விருது, விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப் பெரிய விருதாகும். இதற்கான அனைத்து பெருமைகளும் எனது சக வீரர்களையே சேரும். அவர்கள் இல்லாவிட்டால் இப்போது நான் சாதித்திருக்கும் எதுவுமே சாத்தியமாகி இருக்காது' என்று கூறினார்.