இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மாதிரியே பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஜமான் கான் பந்து வீசி வருகிறார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி தற்போது கொழும்புவில் நடந்தது. இதில், மழை குறுக்கீடுப் பிறகு 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதை மனதில் வைத்து பாகிஸ்தான் விளையாடியது. தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் 69 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் துனித் வெல்லலகே பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். முகமது ஹரிஷ் 3 ரன்களில் ஆட்டமிழக்க முகமது நவாஸ் 12 ரன்களில் அவுட்டானார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 27.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
ஒரே வருடத்தில் 2 திருமணம்: 2ஆவது முறையாக திருமணத்திற்கு தயாராகும் ஷாஹீன் அஃப்ரிடி!
இதையடுத்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடத் தொடங்கினர். இந்த ஜோடி 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இப்திகார் அகமது 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்து வந்த ஷதாப் கான் 3 ரன்களில் வெளியேற கடைசியாக ஷாஹீன் அஃப்ரிடி களமிறங்கினார்.
ஒரு புறம் அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஒருகட்டத்தில் அவரது எல்பிடபிள்யூ வாய்ப்பையும் இலங்கை வீரர்கள் ரெவியூ எடுக்காமல் கோட்டைவிட்டனர். ஆனால், டிவி ரீப்ளேயில் எல்பிடபிள்யூ சரியான முறையில் காட்டியது. இதையடுத்து அதிரடியாக விளையாடி ரிஸ்வான் கடைசில 73 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 86* ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக பாகிஸ்தான் 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டும், மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டும், துனித் வெல்லலகே ஒரு விக்கெட்டும், மதீஷா பதிரனா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
Sri Lanka vs India, Fans Fight: இலங்கை தோல்வி: இந்திய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட இலங்கை ரசிகர்கள்!
பின்னர் கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் தொடக்க வீரர் குசல் பெரேரா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் எந்தவித பயமும் இல்லாமல் பவுண்டரி மேல் பவுண்டரி அடித்தார். அவர் 8 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 17 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 2ஆவது ஓவரை அறிமுக வீரர் ஜமான் கான் வீசினார். இது தான் அவரது முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மாதிரியும், தற்போது இலங்கை அணிக்காக விளையாடி வரும் மதீஷா பதிரனா மாதிரியும் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளார். இலங்கைக்கு எதிரான தனது முதல் ஓவரை வீசிய ஜமான் கான் அந்த ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் மெய்டனாக வீசியுள்ளார். ஜமான் கான் பந்து வீச்சு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூட விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
