இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி, 127 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரோரி பர்ன்ஸ்(6), டோமினிக் சிப்ளி(22), கேப்டன் ஜோ ரூட்(29), ஓலி போப்(3) ரன்களில் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் ஜோ ரூட், ஓலி போப் என விக்கெட்டுகள் சரிந்தாலும், 3ம் வரிசையில் இறங்கிய க்ராவ்லி மட்டும் களத்தில் நிலைத்து ஆடினார். 4 விக்கெட்டுகளுக்கு பிறகு க்ராவ்லியுடன் ஜோடி சேர்ந்த பட்லர், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கொஞ்சம் கூட அசராமல், எந்தவித பதற்றமும் இல்லாமல் அடித்து ஆடிய க்ராவ்லி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 170 பந்தில் சதமடித்த க்ராவ்லி, நேற்றைய ஆட்ட முடிவில் 171 ரன்கள் அடித்திருந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய பட்லர், நேற்றைய ஆட்டமுடிவில் 87 ரன்கள் அடித்திருந்தார். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தை க்ராவ்லியும் பட்லரும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தின் முதல் செசன், மழையால் 2 முறை இடையிடையே பாதிக்கப்பட்டது. ஆனாலும் தொடர் மழை இல்லாததால் போட்டி தொடர்ந்து நடந்ததால், முதல் செசனிலேயே பட்லர் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பட்லருக்கு இது இரண்டாவது சதம். 

உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டாவது செசன் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இரட்டை சதமடிடித்தார் க்ராவ்லி. 22 வயதே ஆன இளம் வீரரான க்ராவ்லி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றியுள்ளார். இங்கிலாந்து அணி 400 ரன்களை கடந்து மெகா ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது.