உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிப்பது ரோஹித், விராட் கோலி மற்றும் பும்ரா தான். இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. 

பொதுவாக அரைசதங்களை எளிதாக சதமாக மாற்றக்கூடிய விராட் கோலியால், உலக கோப்பையில் 5 அரைசதங்கள் அடித்தும்கூட அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றமுடியவில்லை. ஆனால் ரோஹித் சர்மா அபாரமாக ஆடிவருகிறார். இந்த உலக கோப்பையில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் ஆடி 4 சதங்களை விளாசியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக நேற்று அவர் அடித்தது இந்த உலக கோப்பையில் அவருக்கு 4வது சதம். 

இந்த உலக கோப்பையில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் ஆடி 544 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மா, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி இறுதி போட்டிவரை சென்று, ரோஹித் சர்மா இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாக ஆடினால் தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வெல்லும் வாய்ப்பை நெருங்கிவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்த யுவராஜ் சிங், அவருக்கு வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். 

அதற்கு, இங்கிலாந்து அணி கோப்பையை வென்றால் ரோஹித் தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்திருந்தார். 

பீட்டர்சனின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்தார் யுவராஜ் சிங். முதலில் அரையிறுதிக்கு தகுதி பெறுங்கள். அதன்பின்னர் ஜெயிப்பது பற்றி பேசலாம். நான் தொடர் நாயகன் விருதை பற்றித்தான் பேசினேனே தவிர உலக கோப்பை வெற்றியை பற்றியல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.