இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து அணியில் 2006ம் ஆண்டு அறிமுகமான ஸ்டூவர்ட் பிராட், 2016ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆடவில்லை. 2007ம் ஆண்டு தனது முதல் போட்டியில் ஆடிய பிராட், 13 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக பந்துவீசிவருகிறார்.

அவரது அனுபவமும் பவுலிங் திறமையும் அவரை ஆல்டைம் பெஸ்ட் பவுலர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து ஸ்டூவர்ட் பிராட் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அசத்திவருகிறார். ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி, சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பவுலிங் ஜோடிகளில் ஒன்று. 

ஸ்டூவர்ட் பிராட் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்ஸில் 62 ரன்களையும் விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். கடைசி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் ஸ்டூவர்ட் பிராட் வென்றார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். மொத்தமாக  இதுவரை 501 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 7வது பவுலர் என்ற பெருமையையும் பெற்றார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ளென் மெக்ராத், கர்ட்லி வால்ஷ் ஆகியோருக்கு அடுத்து, 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 7வது பவுலர் பிராட். 

எனவே ஸ்டூவர்ட் பிராடை அனைவரும் பாராட்டுவதுடன், அவர் மென்மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஸ்டூவர்ட் பிராட் எத்தனையோ சாதனைகளை புரிந்தாலும், அவரை மட்டம்தட்டும் அல்லது கிண்டலடிக்கும் வகையில் யுவராஜ் சிங், அவரது பவுலிங்கில் 2007 டி20 உலக கோப்பையில் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்ஸர்களை சுட்டிக்காட்டுவது வாடிக்கையாகவுள்ளது. 

இந்நிலையில், பிராடை வைத்து அந்த சம்பவத்தை செய்த யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராடுக்கு பாராட்டு தெரிவித்திருப்பதுடன் ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் பதிவிட்ட டுவீட்டில், எனக்கு நன்றாக தெரியும்.. ஒவ்வொரு முறை ஸ்டூவர்ட் பிராடை பற்றி பேசும்போதும், நான் அடித்த 6 சிக்ஸர்களை பற்றியே அனைவரும் பேசுகின்றனர். இப்போது நான் எனது ரசிகர்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.. ஸ்டூவர்ட் பிராடின் அபாரமான சாதனையை பாராட்டுங்கள். 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது ஜோக் கிடையாது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, உறுதி ஆகியவற்றிற்கு கிடைத்த பரிசு தான் இது. பிராட் நீ ஒரு லெஜண்ட்.. தலைவணங்குகிறேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

ஸ்டூவர்ட் பிராட் இளம் வீரராக இருந்தபோதோ என்றைக்கோ நடந்த விஷயத்தை இன்றும் சொல்லிக்காட்டுவதை விடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் செய்திருக்கும் சாதனைக்கு அவரை பாராட்டுங்கள் என்று எதார்த்தத்தை யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.