இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய யுவராஜ் சிங், 40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய அணி வென்ற 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டிலும் முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். 2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது யுவராஜ் சிங் தான் தொடர் நாயகன் விருதை வென்றார். அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்துவகையிலும், சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார் யுவராஜ் சிங்.

2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியில் ஆடிராத யுவராஜ் சிங், கடந்த ஆண்டு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.  வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடும் விதமாக, ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங். ஓய்வுக்கு பிறகு கடந்த கனடா டி20 லீக் தொடரில் யுவராஜ் சிங் ஆடினார்.

இந்நிலையில், பஞ்சாப் கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக, யுவராஜ் சிங் ஓய்வு முடிவை திரும்பப்பெற்று உள்நாட்டு டி20 போட்டிகளில் பஞ்சாப் அணியில் ஆடவேண்டும் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் புனீத் பாலி, யுவராஜ் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read - ஐபிஎல் 2020: அஷ்வினின் ஒற்றை கேள்வியால் பெட்டிப்பாம்பாய் அடங்கிய பாண்டிங்..!

புனீத் பாலியின் கோரிக்கையை ஏற்று யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று பஞ்சாப் அணிக்காக உள்நாட்டு டி20 போட்டிகளில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் ரஞ்சி போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை. ஆனால் புனீத் பாலியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து உள்நாட்டு டி20 போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக ஆட வாய்ப்பிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

Also Read -ஐபிஎல் 2020: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிர்ச்சிகர ஆடும் லெவன்.. தலைசிறந்த வீரருக்கே டீம்ல இடம் இல்ல

ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங், அன்மோல்ப்ரீத் சிங் ஆகிய வளர்ந்துவரும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் பஞ்சாப் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காகவும் யுவராஜ் சிங் ஓய்வு முடிவை திரும்பப்பெற்று, உள்நாட்டு டி20 போட்டிகளில் ஆடவுள்ளார். விரைவில், யுவராஜ் சிங் ஓய்வு முடிவை வாபஸ் பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.