அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்திய அணியும் வங்கதேச அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டி இன்று நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சக்ஸேனாவும் இறங்கினர். இருவரும் மெதுவாக ஆரம்பித்தனர். போகப்போக வேகமெடுப்பார்கள் என்று பார்த்தால், கடைசி வரை வேகமெடுக்காமலேயே சக்ஸேனா ஆட்டமிழந்தார். 

17 பந்தில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து சக்ஸேனா ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த திலக் வர்மா, ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அடித்து ஆடி விரைவில் ரன்களை குவிக்கவில்லையே தவிர, இருவரும் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் பிரியம் கர்க் 7 ரன்களில் நடையை கட்ட, அணியின் ஸ்கோர் குறைவாக இருந்தது. எனவே களத்தில் நிலைத்து அரைசதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அரையிறுதி போட்டியில் சதமடித்த ஜெய்ஸ்வால், இந்த போட்டியிலும் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஆனால் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், பந்தை தூக்கியடிக்க முயன்று 88 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 156 ரன்களாக இருந்தபோது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது. 22 ரன்கள் அடித்திருந்த த்ருவ் ஜுரேல் ரன் அவுட்டானார். அதன்பின்னர் யாருமே இரட்டை இலக்க ரன்னே அடிக்கவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்திலும் டக் அவுட்டும் ஆகி வெளியேற, ஜெய்ஸ்வால் அவுட்டான, அடுத்த 21 ரன்களில் இந்திய அணி எஞ்சிய 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

வங்கதேச அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இது எளிய இலக்குதான் என்றாலும், இந்திய அணியின் பவுலிங் யூனிட் மிகச்சிறப்பாக உள்ளதாலும், இறுதி போட்டியில் சேஸிங் என்ற அழுத்தம் வங்கதேச அணியின் மீது இருப்பதாலும், இதை அடிப்பது எளிதல்ல. இதை சவாலான இலக்கு என்றே சொல்லலாம்.