Asianet News TamilAsianet News Tamil

India vs England 5th Test: சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் மற்றும் அதிக ரன்கள் எடுத்ததன் மூலமாக சச்சின் மற்றும் விராட் கோலி சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

Yashasvi Jaiswal broke Sachin Tendulkar and Virat Kohli's record for most sixes and most runs in the Test series against England rsk
Author
First Published Mar 8, 2024, 10:02 AM IST

இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவ் 29, பென் டக்கெட் 27, ஜோ ரூட் 26 என்று ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. இதில், ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் 57 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்த டெஸ்ட் தொடரில் மட்டுமே ஜெய்ஸ்வால் 712 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்திற்கு எதிராக 2016/17 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி 655 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு பிறகு 700 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். கடந்த 1971/72 ஆம் ஆண்டுகளில் சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் எடுத்தார். இதே போன்று, 1978/79 ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த தொடரில் மட்டுமே ஜெய்ஸ்வால் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலமாக 92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் அதிக சிக்ஸர்கள் விளாசுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக சச்சின் 25 சிக்ஸர்கள் மட்டுமே அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது ஜெய்ஸ்வால் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios