மகளிர் ஐபிஎல் 2026 கிரிக்கெட் ஏலத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3.20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். ஸ்டார் வீராங்கனை ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலியை யாரும் வாங்காதது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உலகின் பணக்கார விளையாட்டு தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கு ஐபிஎல் போல் பெண்களுக்கு Women's Premier League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன.

தீப்தி சர்மா அசத்தல்

இந்நிலையில், Women's Premier League 2026 தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் உலகக்கோப்பையில் அசத்திய தீப்தி சர்மா அதிகப்பட்சமாக 3.20 கோடி ரூபாய்க்கு உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி 'ரைட் டு மேட்ச்' (Right to Match - RTM) அட்டையைப் பயன்படுத்தி மீண்டும் வாங்கியது. கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமீலியா கெர்ரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 3 கோடிக்கு வாங்கியது.

மெக் லானிங், லாரா வோல்வார்ட்

நியூசிலாந்தின் சோஃபி டிவைனை ரூ.1.90 கோடிக்கு உ.பி. வாரியர்ஸ் அணியும், ஆஸ்திரேலிய ஸ்டார் வீராங்கனை மெக் லானிங்கை குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூபாய் 1.10 கோடிக்கு வாங்கியது.

ரேணுகா சிங், ஸ்ரீ சரணி

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை ரூபாய் 60 லட்சத்திற்கு வாங்கியது. ஸ்னே ராணாவை ரூபாய் 50 லட்சத்திற்கும், ஸ்ரீ சரணியை ரூபாய் 1.3 கோடிக்கும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி வாங்கியது.

அலிசா ஹீலியை யாரும் ஏலம் எடுக்கவில்லை

மகளிர் ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் கேப்டன் அலிசா ஹீலியை எந்த அணியும் வாங்காதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏலத்தில் முதல் ஆளாக அவர் பெயர் வாசிக்கப்பட்டாலும் சமீபத்திய பார்ம் காரணமாகவும், காயம் காரணமாக‌வும் அவரை எந்த அணியும் சீண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் அலனா கிங், ஆஷா சோபனா, பிரணவி சந்திரா, டேவினா பெரின், விருந்தா தினேஷ், திஷா கசாட், அருஷி கோயல் ஆகிய வீராங்கனைகளும் ஏலம் போகவில்லை.