மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான் அட்டவணை வெளியீடு, விட்ட இடத்திலிருந்து தொடங்கும் டெல்லி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் போன்று, பெண்களுக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டபிள்யூபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான 2ஆவது சீசன் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், டபிள்யூபிஎல் தொடரின் 2ஆவது சீசனுக்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்த தொடரில் மொத்தமாக 22 போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், எல்லா போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டியானது மார்ச் 17 ஆம் தேதி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசன் ஹோம் பார்மேட்டில் நடந்தது. ஆனால், இந்த சீசனுக்கா எல்லா போட்டிகளும் டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடத்தப்படுகிறது.
இந்த 5 அணிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரில் மோதும். மேலும் முதல் இடத்தில் இருக்கும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். முதல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியானது சாம்பியனானது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர், 345 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹைலி மேத்யூஸ் 10 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.