மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. க்ரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடந்தது. கேப்டவுனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ரஞ்சி டிராபி: அரையிறுதியில் பெங்கால் & சௌராஷ்டிரா அணிகள் அபார வெற்றி..! ஃபைனலில் பலப்பரீட்சை
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, யஸ்டிகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.
பாகிஸ்தான் மகளிர் அணி:
ஜவேரியா கான், முனீபா அலி (விக்கெட் கீப்பர்), பிஸ்மா மரூஃப் (கேப்டன்), நிதா தர், சிட்ரா அமீன், ஆலியா ரியாஸ், ஆயிஷா நசீம், ஃபாத்திமா சனா, ஐமான் அன்வர், நஷ்ரா சந்து, சாதியா இக்பால்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 55 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தார். 6ம் வரிசையில் இறங்கிய ஆயிஷா நசீம் அதிரடியாக ஆடி 25 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 43 ரன்களை விளாச, 20 ஓவரில் 149 ரன்களை குவித்தது பாகிஸ்தான் மகளிர் அணி.
150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா 33 ரன்களும், யஸ்டிகா பாட்டியா17 ரன்களும் அடித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 5ம் வரிசையில் இறங்கிய ரிச்சா கோஷ் 20 பந்தில் 31 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
19வது ஓவரில் இலக்கை அடித்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
