முதல் சீசனுக்கான மகளிர் பிரிமீயர் லீக்கில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. 

ஆண்கள் ஐபிஎல் தொடரைப் போன்று இந்த ஆண்டு மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் ஆரம்பமாகிறது. வரும் மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் சீசனில் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 5 அணிகளை ஏலத்தில் எடுப்பதற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 3 அணிகள் உள்பட அதானி குரூப் (அகமதாபாத் அணி), கேப்ரி குளோபல் (லக்னோ அணி) ஆகிய நிறுவனங்களின் அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக ரூ.4669.99 கோடி வரையில் பிசிசிஐக்கு வருவாய் வந்ததாக செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

மகளிர் டி20 உலக கோப்பை: ஜெமிமா அதிரடி அரைசதம்.. முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மும்பையில் நடக்கிறது. மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இந்த ஏலத்தில் 5 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்த ஏலத்தில் 90 வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.

முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த கலை பொருட்கள் சேகரிப்பாளரும், ஆலோசகருமான மல்லிகா சாகர் இந்த ஏலத்தை நடத்த இருக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த புரோ கபடி லீக் ஏலத்தை நடத்தியுள்ளார். இந்த ஏலத்திற்காக கிட்டத்தட்ட 1525 வீராங்கனைகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 409 பேர் மட்டுமே இந்த ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில், 246 பேர் இந்தியர்கள். 163 பேர் வெளிநாட்டினர். இந்த பட்டியலிடப்பட்டுள்ள வீராங்கனைகளிடமிருந்து ஒவ்வொரு அணிக்கும் 18 வீராங்கனைகள் வீதம் மொத்தம் 90 வீராங்கனைகள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட உள்ளவர்கள். அவர்களில் 60 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 30 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர்.

ஒவ்வொரு அணியும் வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக ரூ.12 கோடி தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்காக ஐபிஎல் கிரிக்கெட் மகளிர் பிரீமியர் லீக் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் என்றும், ரூ.20 லட்சம் என்றும் அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச விலையான ரூ.50 லட்சத்திற்கான ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்று 10 இந்தியர்கள் உள்பட மொத்தமாக 24 வீராங்கனைகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதே போன்று ரூ.40 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு 30 வீராங்கனைகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.