ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

Shreyas Iyer Jaiswal Dropped indian Team Asia Cup Squad: ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து தொடரில் அசத்திய முகமது சிராஜ், காயம் அடைந்த ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் இல்லை

ஐபிஎல்லில் அசத்திய ஆர்சிபியின் இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சஞ்சு சாம்சன், ஷிவம் துபேவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். அதே வேளையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது ஏன்?

மேட்ச் வின்னர்களான இவர்கள் இருவரும் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் விளக்கம் அளித்துள்ளார். ''ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அவர் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அணியில் இடம் காலியாகும்போது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்'' என்றார்.

வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்

தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது குறித்து பேசிய அஜித் அகார்கர், ''ஷ்ரேயாஸை பொறுத்தவரை. அதை நாம் மாற்றிக்கொள்ளலாம். அவர் அணியில் சேர்க்கப்படாதது அவரது தவறு இல்லை. எங்களுடைய தவறும் இல்லை. அணியில் 15 பேரைத் தான் தேர்ந்தெடுக்க முடியும். இந்த நேரத்தில் ஷ்ரேயாஸ் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்'' என்று தெரிவித்தார்.

அணியை தேர்வு செய்வது பெரும் தலைவலி

மேலும் அபிஷேக் சர்மாவை அணியில் எடுத்தது குறித்து பேசிய அகார்கர், ''கடந்த சில மாதங்கள் அல்லது ஒரு வருடமாக அணியுடன் இருந்ததில் இருந்து அபிஷேக் சர்மா என்ன செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், அவர் கொஞ்சம் பந்து வீச முடியும் என்பது கேப்டனுக்குத் தேவைப்பட்டால் எங்களுக்கு ஒரு விருப்பத்தை அளிக்கிறது. T20 அணியில் எங்களுக்கு சில சிறந்த வாய்ப்புகள் உள்ளன. ஆகவே 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது எளிதானது அல்ல; பெரும் தலைவலி'' என்றார்.

பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்

ஷ்ரேயாஸ், ஜெய்ஸ்வாலை அணியில் சேர்க்காத பிசிசிஐயை ரசிகர்கள் விளாசி வருகின்றனர். ''ஐபிஎல்லில் சரியாக விளையாடாத ஷிவம் துபேவுக்கு பதிலாக அதிரடி வீரர் ஜெய்ஸ்வாலை எடுத்திருக்கலாம். இதேபோல் ஜிதேஷ் சர்மாவை இவ்வளவு வேகமாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு பதிலாக அனுபவ வீரர் ஷ்ரேயாஸை எடுத்திருக்கலாம்''என ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்ஷித் ரானா.