- Home
- Sports
- Sports Cricket
- Babar Azam: ஆசியக் கோப்பை 2025! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டது ஏன்?
Babar Azam: ஆசியக் கோப்பை 2025! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டது ஏன்?
ஆசியக்கோப்பை 2025 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் மூத்த வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Asia Cup Pakistan Squad! Babar Azam, Mohammad Rizwan Dropped
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா தொடக்க ஆட்டத்தில் யு.ஏ.இ அணியை செப்டம்பர் 10ம் தேதி எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி தொடங்குகிறது.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான் நீக்கம்
இந்நிலையில், ஆசியக்க்கோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக அந்த அணியின் ஸ்டார் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சல்மான் அலி ஆகா தலைமையிலான 17 பேர் கொண்ட அணியில் முகமது ஹாரிஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஃபகர் ஜமான் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சயீம் அயூப், ஹசன் நவாஸ் போன்ற இளம் வீரர்களும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மோசமான பார்ம்
சமீபகாலமாக பாகிஸ்தான் ஒருநாள் அணி கேப்டனாக இருக்கும் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆசிய கோப்பை மட்டுமின்றி இந்த மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெறவில்லை. டி20 கிரிக்கெட்டில் மோசமான ஸ்ட்ரைக் ரேட் காரணமாக இருவரையும் இனி டி20 அணியில் சேர்க்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் தேர்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
2024 டிசம்பரில் தான் பாபர் அசாம் கடைசியாக பாகிஸ்தானுக்காக டி20 போட்டியில் விளையாடினார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சால்மி அணிக்காக 128.57 ஸ்ட்ரைக் ரேட்டில் 288 ரன்கள் மட்டுமே பாபர் அசாம் எடுத்தார்.
பாகிஸ்தான் -இந்தியா மோதல்
செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசியக் கோப்பையில் இந்தியா, யுஏஇ மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் ஒரே பிரிவில் உள்ளது. செப்டம்பர் 12ம் தேதி ஓமன் அணியுடன் பாகிஸ்தான் முதல் போட்டியில் விளையாடுகிறது. செப்டம்பர் 14ம் தேதி இந்திய அணியுடன் மோதுகிறது.
செப்டம்பர் 17 ம் தேதி யுஏஇக்கு எதிராக பாகிஸ்தானின் கடைசி லீக் போட்டி நடைபெறும். லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோருக்கு முன்னேறும். ஆசியக் கோப்பைக்கு முன்னதாக யுஏஇ மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் நடைபெறும் மூன்று நாடுகள் பங்கேற்கும் டி20 தொடரிலும் பாகிஸ்தான் விளையாடும்.
பாகிஸ்தான் இரண்டாவது இடம்
2023ம் ஆண்டு ஒருநாள் போட்டியாக நடைபெற்ற ஆசியக் கோப்பையில் சூப்பர் ஃபோருக்கு முன்னேறிய போதிலும், மூன்றில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 2022ம் ஆண்டு டி20 போட்டியாக நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சலீம்சாதா ஃபர்ஹான், ஷாஹிர்ஃப், சலீம் அகமது மற்றும் சுஃப்யான் மொகிம்.