36 ஆண்டுகளில் முதல் முறையாக கப்பா டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கப்பாவில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் 36 ஆண்டுகளில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 289 ரன்கள் எடுத்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்து 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் 215 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 10 ரன்களிலும், மார்னஸ் லபுஷேன் 5 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். ஸ்டீவ் ஸ்மித் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர், கடைசியாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 1-1 என்று சமன் செய்துள்ளது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமர் ஜோசஃப் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அவரது அபாரமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் 36 ஆண்டுகளில் முதல் முறையாக கப்பா டெஸ்ட் போட்டியில் முத்திரை பதித்துள்ளது. மேலும், 31 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை டிரா செய்துள்ளது.