உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸை தவிர மற்ற அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணிக்கான வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. 

எனினும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாகவே உள்ளன. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் வலுவான அணியாக உள்ளது. அனுபவம் மற்றும் இளம் துடிப்பான வீரர்களை உள்ளடக்கிய அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் சீராக ஆடுவதில்லை. பெரிய வெற்றி அல்லது படுதோல்வி என்கிற ரீதியில் தான் இந்த அணிகள் ஆடும். சீராக ஆடினால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய ஹெட்மயர், ஒஷேன் தாமஸ், ஷாய் ஹோப் ஆகியோரும் அணியில் உள்ளனர். நிகோலஸ் பூரான், கேப்ரியல், டேரன் பிராவோ, ஆஷ்லி நர்ஸ், பிராத்வெயிட் ஆகியோரும் அணியில் உள்ளனர். 

உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), கெய்ல், ஆண்ட்ரே ரசல், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரான்(விக்கெட் கீப்பர்), பிராத்வெயிட், டேரன் பிராவோ, எவின் லெவிஸ், ஃபேபியன் ஆலென், ரோச், ஒஷேன் தாமஸ், ஆஷ்லி நர்ஸ், கேப்ரியல், கோட்ரெல்.