இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது.

ஜமைக்காவில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் இந்திய அணி களம் காண, வெஸ்ட் இண்டீஸ் அணி 2 மாற்றங்களுடன் இறங்கியது. கம்மின்ஸுக்கு பதிலாக அறிமுக வீரர் கார்ன்வாலும் ஹோப்புக்கு பதிலாக ஹாமில்டனும் எடுக்கப்பட்டனர். 

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்துள்ளது. ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர். மயன்க் அகர்வால் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். 

2007 உலக கோப்பையில் ஆடிய பெர்முடா அணியில் ஆடிய ட்வைன் லெவெராக்கை நினைவுபடுத்தும் உருவ அமைப்பு கொண்ட கார்ன்வால், அறிமுக போட்டியிலேயே சிறப்பாக ஆடிவருகிறார். அறிமுக போட்டியில் அவர் வீழ்த்திய முதல் விக்கெட்டே சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவின் விக்கெட். அதுமட்டுமல்லாமல் ஸ்லிப்பில் எந்த தவறும் செய்துவிடாமல் 2 கேட்ச்களையும் பிடித்தார். 

கார்ன்வால் அபாரமாக பந்துவீசுவதாகவும் அவரது பந்து மற்ற ஸ்பின்னர்கள் வீசுவதை விட சற்று கூடுதலாக பவுன்ஸ் ஆவதால், அவரது பந்தில் ஸ்கோர் செய்வது கடினம் என்றும் மயன்க் அகர்வால் பாராட்டி பேசியிருந்தார். 

6 அடி 6 அங்குலம் உயரமுடைய கார்ன்வாலின் எடை 140 கிலோ. கிரிக்கெட் வரலாற்றில் வெயிட்டான வீரர் இவர் தான். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் வார்விக் ஆம்ஸ்ட்ராங் தான்(133-139கிலோ) அதிக எடை கொண்ட வீரராக இருந்தவர். அவரது சாதனையை கார்ன்வால் முறியடித்துவிட்டார்.