வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை இலங்கை வென்ற நிலையில், 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸும் பிரண்டன் கிங்கும் நிதானமாக தொடங்கினர். அவர்கள் பெரியளவில் அதிரடியாக ஆடவில்லை என்றாலும், ஓரளவிற்கு நன்றாகவே ஸ்கோர் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 74 ரன்களை சேர்த்தனர். பிரண்டன் கிங் 25 பந்தில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களத்திற்கு வந்த நிகோலஸ் பூரான் 12 பந்தில் 14 ரன்கள் அடித்து அவுட்டானார். அதன்பின்னர் வந்த ஆண்ட்ரே ரசல், வழக்கமான தனது அதிரடி பேட்டிங்கை ஆடி ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ரசல், வெறும் 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 35 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ரசலின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஸ்கோர் உயர்ந்தது.

ரசல் அவுட்டாகி சென்றதும், அவர் விட்டுச்சென்ற பணியை, விட்ட இடத்திலிருந்தே தொடர்ந்தார் கேப்டன் பொல்லார்டு. பொல்லார்டும் பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 15 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசி அவரும் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த சிம்மன்ஸ், 67 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 196 ரன்களை குவித்தது. 

197 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, ஷெஹான் ஜெயசூரியா, குசால் மெண்டிஸ், மேத்யூஸ், ஷனாகா ஆகியோர் ரன்னே அடிக்காமலும் ஒற்றை இலக்கத்திலும் வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹசரங்கா அதிரடியாக ஆடி 34 பந்தில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் குசால் பெரேரா நிலைத்து நிற்க, அவருக்கு யாருமே ஒத்துழைப்பு தராமல் தொடர்ந்து அவுட்டானதால், அழுத்தம் அதிகரித்தது. அரைசதம் அடித்து சிறப்பாக ஆடிய அவரும், 66 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து 171 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

Also Read - இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிப்பு.. தாதாவின் கேப்டன்சியில் அசத்திய வீரர் தேர்வு

 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்து வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு உதவிய ஒஷேன் தாமஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.