இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் இருந்துவந்தார். இவரது காலக்கட்டத்தில் இந்திய அணியின் தேர்வு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. அதன் விளைவாக எம்.எஸ்.கே.பிரசாத்தும் பல்வேறு வசைகளை எதிர்கொண்டார். இந்நிலையில், பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினரான ககன் கோடா  ஆகிய இருவரின் பதவிக்காலமும் அண்மையில் முடிவடைந்ததையடுத்து, அந்த பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் அதிலிருந்து சுனில் ஜோஷி, வெங்கடேஷ் பிரசாத், லக்‌ஷமண் சிவராமகிருஷ்ணன், ஹர்வீந்தர் சிங் ஆகியோர் பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டன. 

இவர்களை மதன் லால், ஆர்பி சிங் மற்றும் சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு(சிஏசி) நேர்காணல் செய்தது. இதையடுத்து சுனில் ஜோஷி தேர்வுக்குழு தலைவராகவும், முன்னாள் உறுப்பினர் ககன் கோடாவின் இடத்திற்கு ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

வெங்கடேஷ் பிரசாத்தும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமாக ஆடிய அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாது, ஜூனியர் அணியின் தலைமை தேர்வாளராகவும் இருந்துள்ளார். ஆனால் நேர்காணலில் வெங்கடேஷ் பிரசாத், லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணனை விட, சுனில் ஜோஷி மற்றும் ஹர்வீந்தர் சிங்கிடம் கூடுதல் தெளிவு இருந்ததாகவும் அதனால் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் சிஏசி தெரிவித்துள்ளது. 

சுனில் ஜோஷி 1996ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடினார். இடது கை ஸ்பின்னரான சுனில் ஜோஷி, 15 டெஸ்ட் போட்டிகளிலும் 69 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி முறையே 41 மற்றும் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 615 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கங்குலி முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு கேப்டன்சி செய்த போட்டியில் தான், சுனில் ஜோஷி தனது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  2000-ல் வங்கதேசத்துக்கு எதிராக தாக்காவில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் 142 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்வீந்தர் சிங் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆவார்.