அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் ஆடியது. ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது. 

இதையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்தது. மூன்றாவது போட்டி செயிண்ட் கிட்ஸில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

139 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ் அயர்லாந்தின் பவுலிங்கை தொடக்கம் முதலே அடித்து நொறுக்கிவிட்டார். ஸ்டிர்லிங் வீசிய முதல் ஓவர் முழுவதையும் எதிர்கொண்டு வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்த சிம்மன்ஸ், இரண்டாவது ஓவரில் 2 பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் விளாசினார். 

மூன்றாவது ஓவரில் எவின் லூயிஸ் ஒரு சிக்ஸர் அடிக்க, நான்காவது ஓவரில் சிம்மன்ஸ் ஒரு பவுண்டரியும், ஐந்தாவது ஓவரில் லூயிஸ் ஒரு பவுண்டரியும் மட்டுமே அடித்தனர். 5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் அடித்தது. அதன்பின்னர் வேற லெவலில் அடித்து ஆட ஆரம்பித்த சிம்மன்ஸ், அயர்லாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 

யங் வீசிய ஆறாவது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அதற்கடுத்த ஓவரில் லூயிஸ் சிக்ஸரும் சிம்மன்ஸ் பவுண்டரியும் அடித்தனர். எட்டாவது ஓவரில் லூயிஸ் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடிக்க, சிம்மன்ஸ் ஒரு சிக்ஸர் அடித்தார். 9வது ஓவரில் சிம்மன்ஸ் 2 சிக்சர்களை விளாசினார். 10வது ஓவரில் சிம்மன்ஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க, 11வது ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சிம்மன்ஸ் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார். 

சிம்மன்ஸ் மற்றும் லூயிஸின் அதிரடியால் 11 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் வெறும் 40 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 91 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எவின் லூயிஸ் 25 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 46 ரன்களை குவித்து, இலக்கை நெருங்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். 

இந்த வெற்றியை அடுத்து தொடர் 1-1 என சமனானது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிம்மன்ஸும் தொடர் நாயகனாக பொல்லார்டும் தேர்வு செய்யப்பட்டனர்.