இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். முதல் போட்டியில் நன்றாக ஆடிய ராகுல், இந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. ரோஹித் சர்மா இந்த முறையும் ஏமாற்றினார். விராட் கோலியும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக பேட்டிங் ஆடிய ஷிவம் துபே, ஆரம்பத்தில் திணறினாலும் பின்னர் சிக்ஸர்களாக விளாசி மிரட்டினார். தனது முதல் இன்னிங்ஸிலேயே அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசி அவுட்டானார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ஏமாற்றமளித்தார். 

ரிஷப் பண்ட் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினாலும் அதன்பின்னர் சரியாக ஷாட்டுகள் கனெக்ட் ஆகாமல் திணறினார். கடைசிவரை ரிஷப் பண்ட்டால் பெரிய ஷாட்டே ஆடமுடியவில்லை. அவரது பெரிய பலமே வித்தியாசமான ஷாட்டுகளை ஆடுவதுதான். ஆனால் ஒன்றிரண்டு ஷாட்டுகள் தான் அப்படி ஆடினார். அதன்பின்னர் இறுதிவரை திணறினார். ஜடேஜாவாலும் அடிக்க முடியவில்லை. 

11 ஓவருக்கே 100 ரன்களை கடந்துவிட்ட இந்திய அணி, 20 ஓவரில் 170 ரன்கள் மட்டுமே அடித்தது. திருவனந்தபுரம் ஆடுகளத்தில் 171 என்பது ஓரளவிற்கு எளிதான இலக்குதான். அந்த இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக தொடங்கினாலும், வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் அடிக்க ஆரம்பித்து பின்னர் அடித்து துவம்சம் செய்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய 5வது ஓவரில் இரண்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் சிம்மன்ஸின் எளிதான கேட்ச்சை சுந்தரும், லூயிஸ் கொடுத்த கேட்ச்சை ரிஷப் பண்ட்டும் தவறவிட்டனர். 

அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அதன்பின்னர் அடித்து ஆட தொடங்கினர். லூயிஸ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹெட்மயர் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சிம்மன்ஸ் அரைசதம் அடித்தார். சிம்மன்ஸுடன் இணைந்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் பூரான். சிம்மன்ஸும் பூரானும் இணைந்து 19வது ஓவரில் போட்டியை முடித்துவிட்டனர். 

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான ஃபீல்டிங்தான் முக்கிய காரணம். கடைசி வரை நின்று ஆடிய சிம்மன்ஸின் கேட்ச்சை 5வது ஓவரிலேயே சுந்தர் தவறவிட்டார். மிகவும் எளிய கேட்ச் அது. அதன்பின்னர் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என வரிசையாக கேட்ச்களை விட்டனர். ஜடேஜா கூட மிஸ் ஃபீல்டு செய்ததுதான் ஆச்சரியம். இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.