லக்னோவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஃப்கானிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய் மற்றும் ஜாவேத் அஹ்மதி ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். 15 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஃப்கானிஸ்தான் அணியை ரஹ்மத் ஷாவும் இக்ரம் அலி கில்லும் இணைந்து காப்பாற்றினர். 

ரஹ்மத் ஷாவும் இக்ரம் அலி கில்லும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இருவருமே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹ்மத் ஷா நிதானமாக ஆட, இக்ரம் அலி கில் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தனர். இக்ரம் அலி கில் 58 ரன்களில், ரன் அவுட்டாக, அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த ரஹ்மத் ஷாவும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 61 ரன்களில ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அஸ்கர் ஆஃப்கான் மட்டுமே 35 ரன்கள் அடித்து ஓரளவிற்கு பங்களிப்பு செய்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

195 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் 7 ரன்களிலும் ஹெட்மயர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப்புடன் ரோஸ்டான் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடினர். இலக்கு எளிதானது என்பதால் விக்கெட்டை இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உணர்ந்து அவசரப்படாமல் மிகவும் நிதானமாக டைம் எடுத்து பொறுமையாக ஆடினர். 

25 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதன்பின்னர் ஹோப்பும் சேஸும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 163 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் கடந்தனர். சதத்தை நெருங்கிய சேஸ், 94 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹோப்பும் பூரானும் இணைந்து 47வது ஓவரில் இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தனர். ஹோப் 133 பந்துகளில் 77 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

வெறும் 195 ரன்கள் என்ற இலக்கை 47வது ஓவர் வரை சென்று விரட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி. இலக்கு என்னவாக இருந்தாலும், வெற்றி பெறுவதுதான் முக்கியம். அந்தவகையில் அவசரப்பட்டு விக்கெட்டுகளை இழப்பதற்கு பதிலாக சூழலையும் ஸ்கோரையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப பொறுமையாக ஆடினாலே போதும், வெற்றிதான் முக்கியம் என்பதை உணர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடினர். வழக்கமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தாறுமாறாக அடித்து ஆட முயற்சி செய்து மோசமான ஸ்கோரை பதிவு செய்வார்கள் அல்லது தோல்வியை தழுவுவார்கள். அண்மைக்காலமாக இதுதான் நடந்துவந்துள்ளது. இந்நிலையில், அணுகுமுறையை மாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.