செம த்ரில்லான மேட்ச்.. வெஸ்லி மாதவெர் ஹாட்ரிக்.. ஒரு ரன்னில் நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி
நெதர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது ஜிம்பாப்வே அணி.

நெதர்லாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணி:
கிரைக் எர்வின் (கேப்டன்), வெஸ்லி மாதவெர், கேரி பேலன்ஸ், ஷான் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா, ரியான் பர்ல், கிளைவ் மதண்டே, வெலிங்டன் மசகட்ஸா, பிராட் இவான்ஸ், டெண்டாய் சதாரா, பிளெஸ்ஸிங் முஸார்பானி.
நாடா, ஐபிஎல்லா..? முடிவெடுத்தே தீரணும்..! பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை
நெதர்லாந்து அணி:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டௌட், டாம் கூப்பர், காலின் ஆக்கர்மேன், மூசா அகமது, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), தேஜா நிதாமனுரு, ஷரிஸ் அகமது, பால் வான் மீகெரென், ஃபிரெட் கிளாசன், ரியான் க்ளெய்ன்.
முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் எர்வின் மற்றும் மாதவெர் இணைந்து அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். எர்வின் 43 ரன்களும், எர்வின் 39 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் அபாரமாக ஆடிய ஷான் வில்லியம்ஸ் மற்றும் கிளைவ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஷான் வில்லியம்ஸ்77 ரன்களையும், கிளைவ் 52 ரன்களையும் குவிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 49.2 ஓவரில் ஜிம்பாப்வே அணி 271 ரன்களை குவித்தது.
272 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் விக்ரமஜித் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் ஓ டௌட் மற்றும் 3ம் வரிசை வீரரான டாம் கூப்பர் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 125 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் ஆக்கர்மேன் 28 ரன்களும், எட்வர்ட்ஸ் 36 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே வீரர் மாதவெர் 44வது ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3வது ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பரபரப்பான இந்த போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிளாசன் அந்த பந்தை அடிக்க, 2 ரன் ஓடி முடித்துவிட்டு, 3வது ரன் ஓடும்போது ரியான் கிளைன் ரன் அவுட்டாக, ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றி பெற்று, 1-1 என தொடரை சமன் செய்தது.